மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளும் இந்த வெள்ளத்தில் மூழ்கியிருந்ததுடன் போக்குவரத்துகளும் முற்றாக பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மழை இல்லாத நிலையில் இன்று திங்கட்கிழமை காலை முதல் சூரிய பகவான காட்சி தர ஆரம்பித்த நிலையில் மாவட்டத்தின் வெள்ள நிலமை வடிந்துவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமை காரணமாக 140க்கும் மேற்பட்ட முகாம்கள் உருவாகியதுடன் சுமார் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இன்று திங்கட்கிழமை காலை முதல் வீடுகளில் வெள்ள நீர் குறைந்துள்ளதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதனால் முகாம்கள் அரைவாசிக்கும் மேல் மூடப்பட்டுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
குறிப்பாக இந்த அனர்த்தம் காரணமாக 80வீதமான மக்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 136000குடும்பங்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் பயிர்கள்,விவசாய செய்கைகள்,:வீதிகள்,வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
குறிப்பாக குளங்கள் பல உடைப்பு எடுத்ததுடன் அவற்றனை திருத்துவதற்கும் செலவுகள் ஏற்படும் எனவும் இந்த வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளம் வடிந்துள்ள நிலையில் முகாம்கள் குறைந்துள்ளடன் தற்போது 55முகாம்களே உள்ளதாகவும் அவர்களுக்கு உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
செங்கடி,கிரான்,வாகரை,வெல்லாவெளி,பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் சில இடங்களில் முகாம்களில் இன்னும் உள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்த வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்துகள் வழமைக்கு திரும்புவதை காணமுடிகின்றது.