மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தம்போது மேற்கொள்ள நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இடப்பெயர்வுகளின்போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் இன்பராஜன்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் மற்றும் படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்;டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் சமைத்த உணவுகளை வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக வெள்ள நீரினால் சூழப்பட்ட வெளியேற முடியாத பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

வாகரை,வாழைச்சேனை,ஓட்டமாவடி,கிரான்,செங்கலடி,வெல்லாவெளி ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் விசேட உத்தரவுக்கமைய தேவையான நிதியொதுக்கீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் முரளிதரன் இங்கு தெரிவித்தார்.

அத்துடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகள் காத்தான்குடி,மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட சில பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தங்குமிடம் மற்றும் உடனடி உணவுகள் வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.