மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்படும் வெள்ள அனர்த்தங்களின்போது பாதிக்கப்படும் மக்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி,சித்தாண்டி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் வெள்ளப்பாதிப்பு உள்ள பகுதிகளை பார்வையிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில குளங்கள் நிரம்பியுள்ளதன் காரணமாக சித்தாண்டி மற்றும் சந்திவெளி பகுதிகள் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினையும் பிரதியமைச்சர் மேற்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ள மக்களையும் பார்வையிட்ட பிரதியமைச்சர் முரளிதரன் பாதிக்கப்பட்ட மக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்துகொண்டதுடன் அவற்றை தீர்த்துவைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் தஞ்சமடைந்த மக்களுக்கான ஒரு தொகை அத்தியாவசிய பொருட்களையும் அகதிமுகாம்களுக்கு நேரடியாக சென்று வழங்கிவைத்தார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகைதந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம்,இரா.துரைரெட்னம்,பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று மக்களுடன் கலந்துரையாடி நிலைமைகளை கேட்டறிந்துகொண்டனர்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சரையும் மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்களில் சந்தித்து மக்களின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்குமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் மாகாணசபை உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.