போதைப்பாவனையற்ற கிராமங்களை உருவாக்கும் திட்டம் - மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பாவனையற்ற கிராமங்களை உருவாக்கும் திட்டம் ஒன்றினை மட்டக்களப்பு மதுவரித்திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.


இதன்கீழ் பிரதேச செயலகம் தோறும் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மதுவரித்திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.

இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடமையாற்றும் கிராம சேவையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் கூட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களின் அத்தியட்சர் சோதிநாதன் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சிவகௌரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது போதைவஸ்து பாவனையினை கட்டுப்படுத்துதல் மற்றும் அதன் பாவனையினால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

மதுபாவனையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் பின்தள்ளப்படும் நிலையில் அதன் தாக்கம் தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறான நிகழ்வுகள் பிரதேச செயலகங்கள் தோறும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.