சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

டிசம்பர் 03 ஆம் திகதி புதன்கிழமையாகிய இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.


கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களம், மட்டக்களப்பிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள், மட்டக்களப்பு மாவட்ட வலது குறைந்தோர் அமைப்புக்கள் உள்ளிட்டவை இணைந்து மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலத்தினை நடத்தினர்.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம், மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபம் வரை சென்றதுடன் அங்கு கண்காட்சி மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட சமூகசேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு உத்தியோகஸ்தர் அருள்மொழி அதன் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விசேட தேவையுடை பாடசாலைகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மாற்றுத்திறனாளிகளின் உற்பத்திகள் கொண்ட கண்காட்சியினையும் அதிதிகள் பார்வையிட்டதுடன் புகைப்படக்கண்காட்சியினையும் அதிதிகள் பார்வையிட்டனர்.

தேசிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.