எல்லைப்பகுதியை கட்டியெழுப்ப அரசியல் பலத்தினை கட்டியெழுப்பவேண்டும் -மீள்குடியேற்ற பிரதியமைச்சர்

எல்லைப்புறங்களை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டுமாகவிருந்தால் நாங்கள் அரசியல் ரீதியாக பலமுள்ள மக்களாக எங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடுவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் நுளம்பு வலைகள் விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பட்டிப்பளை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பட்டிப்பளை பிரதேச மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளருமான பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சந்திரபால,பட்டிப்பளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அப்பகுதியில்  மக்களின் நன்மை கருதி நுளம்பு வலைகள் பிரதியமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர்,

நாங்கள் இன்று அனைத்தையும் இழந்துள்ளோம்.நாங்கள் தமிழ் தேசியம் கதைத்துக்கொண்டிருந்தால் எமது எதிர்கால சந்ததியை படுகுழிக்குள் தள்ளும் நிலையே ஏற்படும்.

இந்த எல்லைப்பகுதி மக்கள் பல கஸ்டங்களுக்குள் வாழ்ந்துவருகின்றனர்.போராட்ட காலத்தில் கூட இப்பகுதி மக்களே கஸ்டங்களை தாங்கி நின்றனர்.இன்று அமைதியான நிலையில் இப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முடிந்தவரையில் மேற்கொண்டுவருகின்றேன்.

எமது மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.இந்த எல்லைப்பகுதியை பாதுகாக்கவேண்டுமாகவிருந்தால் நாங்கள் அரசியல் ரீதியாக பலமடையவேண்டும்.அதற்காக அரசியல் ரீதியாக பலமுள்ள மக்களாக எங்களை நாங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்.

எமது முஸ்லிம் சகோதரர்களை நாங்கள் முன்னோக்கிப்பார்க்கவேண்டும்.அவர்களின் அரசியல் பலமே அவர்களின் இருப்பினை பலமாக்கியுள்ளது.இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று சிறிய பகுதிகளுக்கு மூன்று அமைச்சர்கள் உருவாக்கியுள்ளனர்.அவர்கள் மூலம் அரசாங்கத்தில் வளங்களைப்பெற்று தங்கள் பகுதிகளை பலப்படுத்திவருகின்றனர்.ஆனால் நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்துகொண்டு எதுவித முன்னேற்றமும் இன்றி பின்நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றோம்.

நான் மட்டும் கிழக்கு மாகாணத்தில் அமைச்சராக இருந்து என்னால் முடிந்த சேவைகளை செய்துவருகின்றேன்.எனக்கு கிடைக்கும் வளங்களை வாகரை தொடக்கம் துறைநீலாவனை வரையில் பகிரவேண்டும்.இந்த துர்ப்பாக்கிய நிலையை நீங்கள் மாற்றவேண்டும்;.ஆளும் கட்சியில் எமது உறுப்பினர்களை உருவாக்கவேண்டும்.

வெறுமனே பத்திரினை அறிக்கைகளுக்கும் உணர்வுபேச்சுகளுக்கு மத்தியில் எமது சமூகம் செல்லுமானால் நாங்கள் இந்த மாவட்டத்தில் மிகவும் கஸ்ட நிலைக்கு செல்லவேண்டிய நிலையேற்படும்.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் எமது ஆதரவினை ஜனாதிபதிக்கு காட்டவேண்டும்.இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார்.அவரின் வெற்றியில் நாங்களும் பங்குதாரராக மாறவேண்டும்.அதற்கான களத்தினை எல்லைப்பகுதியில் இருந்து நீங்கள் ஆரம்பிக்கவேண்டும் என தெரிவித்தார்.