யார் தேவையில்லை என்பதை தீர்மானித்து அவர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் -கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜனா

வடமாகாணசபைத்தேர்தலில் மக்கள் எவ்வளவு ஆர்வமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களோ அதேபோல் இம்முறை எம் மக்களுக்கு யார் தேவையில்லை என்பதை தீர்மானித்து அவருக்கு எதிராக உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஜனா தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பாலர் பாடசாலையின் ஒளிவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த சமுதாயத்தில் நாங்கள் தலைசிறந்த கல்விமான்களாகவோ அல்லது வேறு துறைகளிலோ சிறந்து விளங்குவதற்கு ஒரு அத்திவாரம் தேவை. எத்தனை மாடிகள் கொண்ட கட்டிடத்தை நாங்கள் அமைப்பதாக இருந்தாலும் அதன் அத்திவாரம் உறுதியானதாகவும் பலமானதாகவும் இருக்க வேண்டும். அத்திவாரம் பலமில்லாதபோது எந்த திறமையான கட்டிடக் கலைஞனால் கட்டப்படும் கட்டிடமும் உடைந்து விழும்.

அதற்கமைய எமது சிறார்களுக்கு சிறுவயதிலேயே முன்பள்ளிகள் மூலம் சிறந்த பலமான அத்திவாரத்தை ஏற்படுத்தும் முன்பள்ளி ஆசிரியர்களை நாம் பாராட்டவேண்டும். நமது சிறார்கள் தமது ஆரம்பப்படியாக முன்பள்ளிகளிலேயே சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கேற்றகாற்போல் ஆசிரியர்களும் சிறார்களுக்கு வழிகாட்டுவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இன்று எமது மாகாணத்திலே பாலர் பாடசாலைகள் இரண்டு நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. முதலமைச்சரின்கீழ் உட்பட்டிருக்கையில் ஒரு நிர்வாகமும் கல்வியமைச்சினூடாக ஒரு நிர்வாகமும் காணப்படுகின்றது. இதில் பல குழப்பங்கள் இருக்கின்றன.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய வேதனம் வழங்குப்படுவதில்லை என்பது மிக வேதனைக்குரிய விடயமாகும். இந்த மாகாணசபையின் கீழ்தான் பாலர் பாடசாலைகளுக்கு எதுவித உதவிகளும் வழங்கப்படுவதில்லை.

குழந்தைகளிடமிருந்து மாதாந்தம் பெற்றுக்கொள்ளப்படும் சிறிய தொகையை கொண்டுதான் ஆசிரியர்களுக்குரிய வேதனம் வழங்கப்படுகின்றது.  இந்த நிலை மாறவேண்டும். கிழக்கு மாகாணசபையின் ஆட்சியதிகாரம் மாறும்போது இந்தநிலையும் மாறும் என்பது உறுதியாகும்.

தற்போது எமது நாட்டின் காலநிலை சீராக இல்லை.அதுபோலவே அரசியல் நிலையும்  சீரற்று காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே மழைக்கு முன் வீசுகின்ற குளிர்காற்றைப்போல பதற்றமும் ஏற்பட்டிருக்கின்றது.யார் சாகப்போகின்றாரோ எந்த அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போகின்றாரோ என்ற எதிர்பார்ப்பும் பீதியும் எங்கள் மத்தியில் இருக்கின்றது.

பத்திரிகை விற்பனை செய்யப்படும் கடைகளில் பத்திரிகைகள் நேரகாலத்திற்கு விற்றுத்தீர்ந்துவிடுவதிலிருந்து மக்கள் நடக்கப்போவதை எவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள் என்பதை நாம் நன்கறிவோம்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பான நாங்கள் எந்தவொரு முடிவையும் மக்களுக்கு அறிவிக்கவில்லை. அதற்கு காரணம் இருக்கின்றது.நாங்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றோமோ அதற்கு எதிர்க்கட்சியினர் நாங்கள் ஆதரவு தெரிவிப்பவர் வெல்லக்கூடாது என்பதற்காக தமிழ் மக்களுக்கு எதிராக தென்பகுதியில் பொய்பிரசாரத்தை மேற்கொண்டு தாம் வெல்வதற்கு அதை பயன்படுத்திக்கொள்வார்கள்.

நாங்கள் அவசரப்படவில்லை ஆனால் எங்கள் ஆதரவு யாருக்கு என்பதை  அறிந்துகொள்வதற்கு இந்த அமைச்சரவை அவசரப்படுகின்றது.
எமது தமிழ் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டும் அவஸ்தைப்பட்டுக்கொண்டும் கட்டுண்டு திறந்தவெளிச்சிறைச்சாலையில் நடமாடுவபை;போன்றும் நடமாடிவருகின்றார்கள். எங்களை இந்த அவதியிலிருந்து மீட்பதற்கு ஒரு இரட்சகன் தேவைப்படுகின்றான்.

எமது பிரதேசத்தில் சிலர் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். தமது இருப்புகளை தக்கவைத்துக்கொள்வதற்காக ஒருவரை வெல்லவைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றார்கள்.

எமது எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமானால் யார் வெல்லவேண்டும் யார் வெல்லக்கூடாது என்பதில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். கடந்த வடமாகாணசபைத்தேர்தலில் மக்கள் எவ்வளவு ஆர்வமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களோ அதேபோல் இம்முறை எம் மக்களுக்கு யார் தேவையில்லை என்பதை தீர்மானித்து அவருக்கு எதிராக உங்கள் வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும்.

மத்தியிலே இன்றிருக்கும் முக்கியமான வேட்பாளர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக இருந்த ஒருவர் ஹீரோவாக வெளியே வந்திருக்கின்றார். ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளராக இருந்த ஒருவர் சீரோவாக வெளியே சென்றிருக்கின்றார். இப்படியாக பெரிய போட்டிகள் மத்தியில் நடந்துகொண்டிருக்கின்றது. அநுராத்தில் நடக்கும் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டக்களப்பிலிருந்து நூறு வண்டிகளில் ஆட்களை கூட்டிச்செல்கின்றார்கள்.

அரசியல்வரும்போது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு இது ஒரு பிழைப்பாகிவிட்டது. அவரிவரிடத்தில் காசை வாங்கிக்கொண்டு வேலையில்லாதிருக்கும் எமது மக்களுக்கு பணத்தையும் உணவையும் கொடுத்து போகுமிடங்களுக்கெல்லாம் கூட்டிச்செல்கின்றார்கள். போகும்போது நல்ல கவனிப்பு ஆனால் வரும்போது நாயிலும் கேவலமாக அவர்கள் நடத்தப்படுகின்றார்கள். இந்த நிகழ்வுகள் நடப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது. 2015ஆம் ஆண்டு தமிழர்களின் விடிவுக்காக பிறக்கவேண்டும்.