மைத்திரியின் தேர்தல் பிரசார ஏற்பாட்டு பணியில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்

(சுஜி)

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது ஆயுததாரிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்த தாக்குதலின்போது ஒருவர் காணாமல்போயுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஐ.தேசிய கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் மாசிலாமணி தெரிவித்தார்.

இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோதிலும் அங்கு சரியான விசாரணைகள் முன்னெடுக்கவில்லையெனவும் தமது முறைப்பாட்டினை பெற்றுக்கொள்வதற்கும் அவர்கள் பின்னடித்தாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு வான்களில் ஆயுதங்களுடன் வந்த சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஐ.தே.கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் மாசிலாமணி தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

இன்று காலை தமது ஆதரவாளர்கள் எட்டுபேர் மட்டக்களப்பு கல்லடி உப்போiடை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை29)நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக சென்றனர்.

இதன்போது இரண்டு வான்களில் ரி56 ரக துப்பாக்கி மற்றும் பொல்லுகள்,கத்திகளுடன் வந்தவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது துரத்திதுரத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது கிருஸ்ணகுமார் சிறிகாந்த்,நாகராஜா சசிகுமார் ஆகிய இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இதன்போது கந்தசாமி ராசா என்பவர் காணாமல்போயிள்ளார்.

இந்த நாட்டில் ஜனாநாயகத்தின் நிலையை இந்த சம்பவம் கேள்விக்குறியாக்கியுள்ளது.

எங்களை தாக்கியவர்கள் தற்போதும் இந்த வீதியால் நடமாடுகின்றனர்.நாங்கள் வானின் இலக்கத்தினையும் பொலிஸாருக்கு வழங்கினோம் .ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

எமக்கு பாதுகாப்பு வழங்க கூடிய பொலிஸாரே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கின்றனர்.இந்த நிலையில் இந்த கூட்டத்தினை இங்கு நடத்தமுடியாத நிலையுள்ளது.

இங்கு வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்று பொலிஸாரை நம்பமுடியாது.நாங்கள் 28,29ஆம் திகதிகளில் கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை பொலிஸ் நிலையத்தில் பெற்றிருந்தபோதிலும் அங்கு எந்த பொலிஸாரும் பாதுகாப்புக்கு அமர்த்தப்படவில்லை.என்றார்.