சிறுபான்மை மக்கள் ஒருபோதும் அரச எதிர் நிலைப்பாடு எடுக்கக்; கூடாது. அருண் தம்பிமுத்து

(விசேட நிருபர்)


தமிழர்கள் எப்போதுமே எதிரணி நிலைப்பாடு எடுத்து வந்ததால் இன்று அது பல பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றிருக்கின்றது. சிறுபான்மை மக்கள் ஒருபோதும் அரச எதிர் நிலைப்பாடு எடுக்கக்; கூடாது என மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து கூறினார்.


நேற்று திங்கட்கிழமை காலை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வழி நடத்தலில் இயங்கும் நீலப்படையணியை கல்குடாத் தொகுதியில் ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம். சந்திரபால தலைமையில் செங்கலடியில் இந்நிகழ்வு இடம்பெற்றபோது அருண் தம்பிமுத்து பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அங்கு இளைஞர் யுவதிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நீலப்படைணி நாடுபூராகவும் ஒரு பலமான இளைஞர் யுவதிகளின் அமைப்பாக உருவாகி வருகின்றது. நீலப்படையணியை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தை இளைஞர் யுவதிகளைக் கொண்டே அபிவிருத்தி செய்ய முடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சரத்பொன்சேகாவுக்கே வாக்களித்தார்கள்.

இந்த முறையும் அவ்வாறு மக்கள் எதிரணிக்கே வாக்களித்தாலும் அது ஜனாதிபதித் தேர்தல் முடிவில் ஒரு போதும் மாற்றம் கொண்டு வரப்போதில்லை.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் மீண்டும் அதிகப்படியான வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இதுவிடயமாக அறிவோடும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் மட்;டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி இடம்பெறவேண்டும். இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புப் பெற வேண்டும். தொழில் பேட்டைகளும் தொழிற்சாலைகளும் உருவாக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் 17 தொழில் பேட்டைகளும் 60 தொழில் சாலைகளும் உள்ளன ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தொழில் பேட்டையோ ஒரு தொழிற்சாலையோ இல்லை.

30 வருட காலம் இடம்பெற்ற போர் அழிவுகளால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் உயிர் உடமை நிம்மதி எல்லாவற்றையுமே இழந்திருந்தார்கள்.

தொடர்ச்சியாக நாங்கள் அரசாங்க எதிரணி நிலைப்பாட்டிலேயே இருப்போமானால் எமது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருக்கும்.

முஸ்லிம் சமூகம் அரசியல் விவகாரங்களில் எதிரணி நிலைப்பாடு எடுக்காததன் காரணமாக இன்று அபிவிருத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

அந்த சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்படும் அமைச்சர்கள் பிரதியமைச்சர்களுக்கூடாக அவர்கள் தங்களது அபிவிருத்தி இலக்கை அடைந்து கொண்டிருக்கின்றார்கள்.
அரசியலில் எவ்வாறு முடிவெடுப்பது என்பது பற்றி முஸ்லிம் சமூகத்தின் முன்மாதிரிகளை தமிழ் சமூகம் பின்பற்ற வேண்டும்;.தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக வீட்டுக்கும் சூரியனுக்கும் வாக்களித்து எதிரணி நிலைப்பாடு எடுத்து இன்று யுத்தத்தால் வீடிழந்து வெறும் சூரிய வெளிச்சத்தில் காலங்கழிக்க வேண்டியதாகி விட்டது.

13 வயதில் மட்டக்களப்பை விட்டு லண்டனுக்குச் சென்ற நான் போய் 33 வயதில் மீண்டும் சொந்த மாவட்டத்திற்குத் திரும்பி மக்களுக்குச் செய்வதற்காக நான் வந்திருக்கின்றேன்.

நான் ஐக்கிய ராச்சியத்தில் பட்டம் பெற்ற பொருதாரவியல் பட்டதாரி என்கின்ற வகையில் எனது கணிப்பில் மட்டக்களப்பு தமிழ் சமூகத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகவுள்ளது.

இந்தப் பொருதாரப் பின்னடைவில் இருந்து இந்த மாவட்டத்தின் தமிழ் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமாகில் குறிப்பாக பெண்கள் தங்கள் கைகளில் பொருளாதாரத்தைப் பொறுப்பெடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சமூகத்திலுள்ள ஆண்கள் யுத்தத்தின் விளைவாக பலமிழந்ததன் காரணமாகவே தமிழ் சமூகத்தின் பொருளாதாரம் அதல பாதாழத்திற்குச் சென்றது.

எனவே பெண்களின் கைகளில் பொருளாதாரத்தை ஒப்படைக்க வேண்டும்.
பொருளாதார ரீதியல் பின்தங்கிய இடத்திலுள்ள மதுபானக் கடைகள் மட்டும் செழிப்பாக இருக்கின்றன.

போர் முடிவடைந்து 5 வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் வறுமையில் முதல் மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அதிகாரிகள் மக்களை அடிப்படையாகக் கொண்ட சரியான முடிவுகளை எடுக்கவில்லை.

உன்னிச்சைக் குளத்திலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மட்டக்களப்பு நகரப்பகுதிகளுக்கு குழாய் நீர் விநியோகம் இடம்பெறுகின்றது.
அதேவேளை அந்தக் குளத்தைச் சூழவுள்ள பரம ஏழைகளான ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிக்க நீரில்லை. இது அதிகாரிகளின் திட்டமிடலால் விளைந்த கோளாறு.

இதுபோன்று ஏழைகளைக் கவனத்தில் எடுக்காது மேற்கொள்ளப்பட்ட தவறான திட்டமிடல்களால்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரந்தரமாகவே வறுமை குடிகொண்டு விட்டது.

சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை வீணாக்கக் கூடாது. தோற்கப் போகும் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது. தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் மீண்டும் அதிகப்படியான வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.”

இந்நிகழ்வில் கல்குடாத் தொகுதி மத்திய கிளைச்  செயலாளர் ஆர். லலீந்திரன், செங்கலடி கிளைத் தலைவர் ஜி. ஜெயப்பிரியன், நீலப்படையணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ. சாகீசன், நீலப்படையணியின் கல்குடாத் தொகுதி இணைப்பாளர் வி. சுரேந்திரன், கல்கிரான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கிளைத் தலைவர் கே. உதயகுமார், கொடுவாமடுக் கிளைக் தலைவர் கே. நற்குணம், கொம்மாதுறைக் கிழக்கு கிளைத் தலைவர் ஜி. கணேசமூர்த்தி, ஐயங்கேணி கிளைத் தலைவர் வி. ஜெயகணேஸ், மங்களகம கிளைத் எம்.ஏ. பியரத்ன, உட்பட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோரும் இன்னும் இளைஞர் படையணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.