கிழக்கு மாகாணசபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வியை தழுவும் நிலையிலேயே திடிரென இன்று இரவு சபை நடவடிக்கைகள் நாளைக்கு பிற்போடப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணசபை அமர்வு திங்கட்கிழமை (01) காலை 9.00மணிக்கு தொடங்கி கோரம் போதுமானது இல்லையென கூறி சபை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் முற்பகல் 10.15 மணியளவில் ஆரம்பமாகியது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் மாத்திரமே சபைக்கு சமூகமளித்திருந்தனர். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியதால், சபை அமர்வு சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை அமர்வு மீண்டும் ஆரம்பமாகியபோது, ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளித்துள்ள நிலையில், தற்போது கிழக்கு மாகாணசபை அமர்வு நடைபெற்றது.
இன்று காலை கிழக்கு மாகாணசபையினால் அடுத்த ஆண்டுக்கான பட்ஜட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான விவாதம் நடைபெற்றதுடன் இன்று இரவு 8.00மணிவரை சபையினை நடத்துவது எனவும் பின்னர் இரவே வாக்கெடுப்பு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இன்று இரவு 7.00மணியளவில் ஆளும் தரப்பில் 11 உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளில் 15 உறுப்பினர்களும் சபையில் இருந்தனர்.
இந்த நிலையில் இடையில் வாக்கெடுப்பினை நடாத்தாது சபாநாயகர் திடிரென சபையினை ஒத்திவைத்தார்.வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கிழக்கு மாகாணசபையின் இந்த ஆண்டு பட்ஜட் தோற்கடிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கையினை சபாநாயகர் மேற்கொண்டார்.
இதன்போது ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
இதேவேளை சபாநாயகர் சபையினை ஒத்திவைத்துவிட்டு கீழ் இறங்கிவரும்போது எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன் செங்கோலையும் தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
