மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் தேடுதல் -பெருமளவான பாவனைக்குதவாத பொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பிரிவினரால் உணவு விடுதிகள், சந்தைப்பகுதிகள்,வெதுப்பகங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் மனித பாவனைக்குதவாத பெருமளவு பொருட்களும் மீட்க்கப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொக்குவில் பொதுச்சுகாதார பரிசோதகர் இராஜ ரவிவர்மன் தலைமையில் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன்,கல்லடி பொதுச்சுகாதார பரிசோதகர் ஜெய்சங்கர்,வலையிறவு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் ஆகியோர் கொண்டு பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது கொக்குவில் பகுதியில் உள்ள வாராந்த சந்தை மற்றும் வெதுப்பகம்,உணவு விடுதிகள்,வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது வாரந்த சந்தைப்பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்குதவாத சுமார் 400 கிலோவுக்கும் அதிகமான வெங்காயங்கள் மற்றும் உருக்கிழங்குகள்,அழுகிய மரக்கறிகள்,அயடின் கலக்கப்படாத சுமார் 300 கிலோவுக்கும் அதிகமான உப்பு பக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் உணவகங்கள் சில சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் வகையில் இருந்ததுடன் அங்கிருந்து மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களும் மீட்கப்பட்டன.

இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை காரணமாக பெருமளவு பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் கொக்குவில் பொதுச்சுகாதார பரிசோதகர் இராஜ ரவிவர்மன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரையின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.