மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட வெள்ள தடுப்பு வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் விசேட வெள்ளத்தடுப்பு செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


மாவட்ட செயலகத்தினால் பரிந்துரைக்கு அமைவாக சர்வதேச குடிபெயர்தலுக்கான நிறுவனம் (ஐ.ஓ.எம். ) இந்த திட்டத்தினை செயற்படுத்தவுள்ளது.

இது தொடர்பாக ஆராயும் கூட்டம் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (07) பகல் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் எஸ்யோகராஜா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன்,  ஐ.ஓ.எம். நிறுவனத்தின் தலைமைத்திட்ட முகாமையாளர் அமெலா முஜாஜிக், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் எம்.ஜெயராஜன், வெல்லாவெளி பிரதேச சபையின் செயலாளர், பொறியியலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அலகு உத்தியோகத்தர் உள்ளிட் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, சீரமைக்கப்படவுள்ள தோணா தொடர்பிலும், அதன் போது மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மதகு, கல்வெட் போன்றவைகள் அமைக்கும் வேளை மக்களிடம் மேற்கொள்ளப்படவுள்ள தெழிவுபடுத்தல்கள் குறித்து ஆராயப்பட்டது.

ஐ.ஓ.எம். நிறுவனத்தால் அனர்த்த முகாமைத்துவ அலகு, பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவுள்ள இத்திட்டத்தில் மட்டக்களப்பு அமிர்தகழி முதல் மட்டக்களப்பு முகத்துவாரம் வரையான பகுதியை சீரமைத்து நீர் வழிந்தோடுவதற்கான வாய்க்கால் திட்டம், வெல்லாவெளி வேத்துச் சேனைப்பிரதேசத்துக்கான பாதை மற்றும் மதகுகளை அமைத்தல் என்பன முதலில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

தற்போது ஆரம்பக்கட்ட வேலைகளான குறிப்பிட்ட இடங்களைப் பார்வையிடுதல், அது தொடர்பான திட்ட முன்ஆய்வுகள் மேற்கொள்ளல் என்பன நடைபெறுவதாகவும், விரைவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.