கணக்காளர் சேவை தரம் 111 க்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை வினாத் தாளில் பல்வேறு பிழை

இலங்கை கணக்காளர் சேவை தரம் 111 க்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை வினாத் தாளில் சிங்கள மற்றும் தமிழ் வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் காணப்படுவதாகவும் அதனால் பல சிக்கல்களை தாம் எதிர் கொண்டதாகவும் பரீட்சாத்திகள் தெரிவிக்கின்றனர்.

நவம்பர் 01, 02ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற இப்பரீட்சைகளில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கு பற்றியிருந்தனர்.

அந்த வகையில், 01ஆம் திகதி நடைபெற்ற கணக்கீடு வினாத்தாளில் வினா ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த திகதி தமிழ் மற்றும் சிங்கள வினாத் தாள்களில் வித்தியாசமாகக் காணப்பட்டது. 31.03.2014 என்று சிங்களத்திலும், 31.03.2013 என்றும் காணப்படுகிறது.

அதே நேரம், 2ஆம் திகதி நடைபெற்ற செலவீன மற்றும் கிரயக் கணக்கியல் வினாத்தாளில் கணக்குத் தொகையானது வித்தியாசமாகக் காணப்பட்டது.
சிங்களத்தில் 1 627 600 என்றும் தமிழில் 1 627 000 என்றும் காணப்படுகின்றது.

இது போன்று பல்வேறு பரீட்சைகளிலும் வினாத்தாள்களில் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான பிரச்சினைகளால் பரீட்சாத்திகள் பல பாதிப்புக்களை எதிர் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. இவ்வாறான தவறுகள் இனி வரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட வர்கள் தெரிவிக்கின்றனர்.