மட்டக்களப்பு மாவட்டத்தல் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைப் பாணிகளில் விவசாயம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.ம்.சார்ள்ஸ் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கங்கள் கையளித்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கையளிக்கப்பட்ட இக் கடிதத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிப்பளை, இலுப்படிச்சேனை, பெரிய மாதவணை, கொம்மாதுறை, கல்குடா தொகுதி தெற்கு, போரதீவு பற்று - தும்பங்கேணி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கங்க கையொப்பமிட்டுள்ளன.
ஏறாவூர் பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஈரளக்குளம் 201 ஏ கிராம சேவைகர் பிரிவிலுள்ள மாதவணை, புதிய மாதவணை, மயிலத்த மடு, மாந்திரியாற்றுப் பகுதி என்னும் இடங்களிலுள்ள 3000 ஏக்கர் மேய்ச்சல் தரைக் காணிகளை பொலநறுவை, அம்பாறை, மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 2014. 11.5ம், 6ம், திகதிகளில் விவசாயச் செய்கைக்கு வழங்குவதற்கு வனவள திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்து வருவாக அறிய முடிகிறது.
இதே போல் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சைக்கொடி சுவாமிமலை 135சி.கிராம சேவகர் பிரிவில் மணல்ஏத்தம் பகுதியிலுள்ள 500 ஏக்கரை கடந்த 3 வருடங்களாக வன வளத்திணைக்களம் வெளி மாவட்ட மக்களுக்கு குத்தகை அடிப்படையில் விவசாயச் செய்கைக்கு வழங்கியிருந்தது. இந்த இரண்டு பகுதிகளும் காலாகாலமாக கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளாக பயன்படுத்தப்பட்டு வந்தவையாகும். குறித்த காணிகளில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் பெருந்தொகையான கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்றி பாரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் குறித்த பகுதி கால்நடைகள் கடுமையான பாதிப்புக்கு உட்படக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
எனவே இக்காணிகள் விவசாயச் செய்கைக்கு வழங்கப்படுவதை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலேயே அவர்கள் தேவைகளுக்கான காணிகள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.
எனவே மேய்ச்சல்தரைக்காணிகளை விவசாயச் செய்கைக்காக வெளி மாவட்டங்களுக்கு வழங்க உள்ள திட்டத்தை நிறுத்தி பரம்பரையாக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகளாக விளங்கும் குறித்த காணிகளை அதே கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரைகளாக வழங்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.