மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு சர்வமத அமைப்பின் உறுப்பினர்களுக்கு அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பு தனது செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்கின்றது.
இங்கு அச்செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் இதன் மூலம் எதிர்கால செயற்திட்டங்களை இரு மாவட்ட அமைப்புகளும் சேர்ந்து எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஆராயும் முகமான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் அமைப்பின் சமாதானத்திற்கான திட்ட இணைப்பாளர் கிறிஸ்டி அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சமாதானத்திற்கான சர்வமதங்களின் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ஜமீல் தலைமையில் கல்முனையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் அமைப்பின் சமாதானத்திற்கான திட்ட இணைப்பாளர் கிறிஸ்டி, நிர்வாக உத்தியோகஸ்தர் மூர்த்தி, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்புகளின் உறுப்பினர்கள் அம்பாறை மாவட்ட சமாதானத்திற்கான சர்வமதங்களின் அமைப்பின் தலைவர் உட்பட அதன் செயலாளரும் ஊடகவியலாளரும், உதவிக்கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா, அமைப்பின் பொருளாளர் பாஸ்டர் கிறிஸ்தோபர், உபதலைவர்களுள் ஒருவரான பாஸ்டர் கிருபைராசா, உபசெயலாளர் இப்றாஹிம் ஆகியோருடன் அதன் உறுப்பினர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
இரு மாவட்ட சர்வமத குழுக்ககளுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலில் அமடபாறை மாவட்ட அமைப்பின் செயற்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் இரு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கிடையில் கருத்துப் பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் மட்டக்களப்பில் இருந்து சென்ற குழுவினர் சொறிக்கல்முனை கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் களுதாவளை பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிற்குச் சென்று தரிசனம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.