பாவனைக்குதவாத பொருட்கள் சுகாதார பரிசோதகர்களினால் மீட்பு

மனித பாவனைக்கு உதவாத வெங்காயம் விற்பனை செய்த வியாபாரிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று மூலம் ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு ஊறணிப்பகுதியில் மரக்கறி விற்பனையாளர்களிடம் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுமார் 400 கிலோ வெங்காயம் மனித பாவனைக்குதவாத முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த வெங்காயத்தினை விற்பனைக்கு வைத்திருந்தவர் மீது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்கள்  குறைந்த விலையில் தரம் குறைந்த உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் இவ்வாறான மோசடி விற்பனைகள் நமது பிரதேசத்தில் அதிகரித்துள்ளதாகவும் இதுதொடர்பில் தாம் அவதானமாக இருப்பதாகவும், இவ்வாறான தொடர் கைப்பற்றுகைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

தம்புள்ளையில் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி பெரிய வெங்காயம் சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிப்பதும், கேடானதும், தூய்மையற்ற, அழுகலான, அருவருப்பான, பதனழிந்த காரணங்களினால் இவை கைப்பற்றப்பட்டதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்..

இதேவேளை மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள கொழும்பை தலைமையகமாக கொண்ட பிரபல விற்பனை நிலையத்திலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.

பதப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி பராட்டாக்கள் கொழும்பில் இருந்து புகையிரதம் மூலம் மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டுவரப்பட்டு உரிய குளிர் நிலை பேணப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பராட்டாக்கல் கைப்பற்றப்பட்டதுடன் விநியோகத்தருக்கு (கொழும்பு கம்பனி) எதிராகவும் விற்பனையாளருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை திங்கட்கிழமை நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.