வறுமை நிலையில் உள்ள விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதார மேம்பாடு உட்பட நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


கிழக்கு மாகாணத்தினை தளமாக கொண்டுசெயற்பட்டுவரும் கொய்நோனியா(KOINONIA)  அமைப்பினால் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றன.

இந்த திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் முதல் கட்டமாக 30 விசேட தேவையுடைய பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் மாடு,ஆடு,சிறுகடைக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

இன்று கொய்நோனியா (KOINONIA) அமைப்பின் திட்ட இணைப்பாளர்களான திருமதி ஆர்.சரோஜினிதேவி மற்றும் திருமதி ஆர்.சுதாளினி ஆகியோரினால் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் இப்பகுதியில் உள்ள விசேட தேவையுடையவர்களின் மருத்துவ உதவி தேவைப்படுவோர் 15பேர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களின் மருத்துவ தேவைகளுக்காக தலா20ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கொய்நோனியா அமைப்பின் திட்ட இணைப்பாளர் திருமதி ஆர்.சரோஜினிதேவி தெரிவித்தார்.

இதேபோன்று வவுணதீவு பிரதேச செயலப்பிரிவில் உள்ள பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.