கிழக்கு மாகாணத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் எதிர்வரும் 16ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகளை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பார்வையிட்டதுடன் மைதானத்தினை பூர்த்திசெய்வது தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இதன்போது விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளர் மற்றும் பொறியியலார்கள்,விளையாட்டுதுறை அதிகாரிகள்,மட்டக்கப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்கப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன்,வெபர் விளையாட்டு மைதான ஒப்பந்ததாரர் சசிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விளையாட்டுத்துறை அமைச்சின் 175 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டும் வெபர் விளையாட்டு மைதானமானது 400மீற்றர் ஓடு பாதை,நீச்சல் தடாகம்,உள்ளக விளையாட்டரங்கு,பார்வையாளர் அரங்கு உட்பட பல பகுதிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
குறித்த வேலைகளை பூர்த்திசெய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை விட மேலும் 50 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவற்றினைப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்தில் விளையாட்டரங்கு மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.