சர்வதேச ரொட்டறிக்கழகங்களின் ரொட்டறி தினத்தினை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
1905ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட ரொட்டறிக்கழகம் சமூக,பொதுப்பணிகளை அதிகளவில் மேற்கொண்டுவருகின்றது.
இதன் கீழ் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தினால் ரொட்டறி தினம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் தலைவர் ரொட்டறியன் டொமிங்கோ ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் ரொட்டறிக்கழக உறுப்பினருமான ரொட்டறியன் வி.தவராஜா உட்பட ரொட்டறிக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சர்வதேச ரீதியில் போலியோ நோயினை ஒழிப்பதற்கு அரும்பணியாற்றிய ரோட்டறிக்கழகங்கள் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் பின்தங்கிய பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றிவருகின்றது.
அந்த வகையில் மட்டக்கள்பு மாவட்டத்தில் 1950ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தினால் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறிப்பாக யுத்த காலங்களிலும் சுனாமி மற்றும் வெள்ள அனர்த்த காலங்களிலும் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கியிருந்தது.
அத்துடன் பின்தங்கிய பகுதி மக்களுக்கான இலவச மருத்துவமுகாம்களை நடத்தி அவர்களுக்கான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திகொடுத்துவருகின்றது.
இவ்வாறு மக்களுக்கு பல்வேறு சேவையாற்றிவரும் ரொட்டறிக்கழகத்தின் சேவைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்றியில் நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன் ரொட்டறிக்கழக தினத்தினை நினைவுபடுத்தும் வகையில் பிரதேச செயலக வளாகத்தில் தென்னங்கன்றுகளும் நடப்பட்டன.