பதுளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உலகமெங்கும் வாழும் தமிழர்கள் முன்வரவேண்டும் - மட்டு.தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உலகமெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் இனமதபேதமின்றி உதவ முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அனர்த்தங்களின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.


இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் மையப்பகுதியில் எமது உறவுகள் இன்று நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து பல்வேறு துன்பக்கடலில் மூழ்கியுள்ளனர்.

இந்த வேளையில் அந்த மக்களுக்கு கைகொடுத்து ஆறுதல் கூறி அவர்களுக்கு உதவ வேண்டியது மனிதநேயமிக்க ஒவ்வொருவரினதும் கடமையாகும்.அந்த வகையில் அந்த மக்களுக்கு இனமத,பேதமின்றி உதவுவதற்கு உலகமெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் முன்வரவேண்டும்.

கடந்த காலத்தில் சொல்லொண்ணா துன்பங்களை சுமந்து நிற்கும் அந்த மக்களின் வாழ்வில் அடிக்கடி பல்வேறு அனர்த்தங்கள் நிகழ்ந்து அந்த மக்களின் வாழ்வினை சூறையாடிவருகின்றது.

இவ்வாறான நிலையில் பதுளை மாவட்டத்தில் உள்ள கொஸ்லாந்தை, மீரியபெத்தைத் தோட்டப் பிரதேசங்களில் பாரிய உயிர் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அதில் இருந்து தப்பியவர்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.

அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்த நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தவேளையில் குறித்த மீட்பு பணிக்கு உதவும் வகையில் நாட்டில் உள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்கள்,பொது அமைப்;புகள் முன்வரவேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றோம்.

இந்த நாட்டில் கடந்த காலத்தில் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டதுடன் அதில் அதிகளவில் தமிழர்களே பாதிக்கப்பட்டனர்.இந்த நாட்டில் இடம்பெறும் அனைத்துவிதமான அனர்த்தங்களிலும் தமிழ் மக்களே அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.