வவுணதீவுப்பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் ஒருவர் பலி-மூவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று பிற்பகல் 2.45மணியளவில் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு மோட்டார் சைக்கிளும் வேகமாக வந்து மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.இந்த விபத்தின்போது வவுணதீவு, கன்னன்குடாவினை சேர்ந்த ஆசிரியரான த.குயலவராஜா(35வயது) என்பவரும் வவுணதீவு நாவற்காட்டை சேர்ந்த காராளசிங்கம் ஹரன்(25வயது)என்பவருமே படுகாயமடைந்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியால் சென்றோரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி என்.ரி.பெர்னாண்டோ இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார்.

இதேபோன்று நேற்று வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் இன்று புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் உள்ள பாலக்காட்டின் வயல்வெளி பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது மோட்டர் சைக்கிளை செலுத்திச்சென்ற ஈச்சந்தீவை சேர்ந்த 32வயதுடைய சுந்தரகுமார் என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துவிச்சக்கர வண்டியை செலுத்திவந்தவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் துவிச்சக்கர வண்டியில் வந்து உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ரி.பெர்னாண்டோ தெரிவித்தார்.

குறித்த சடலத்தினை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.