இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் தலைவராக அலிஸாஹிர் மௌலானா தெரிவு

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் தலைவராக இம்முறை ஏறாவூர் நகர சபையின் முதல்வர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் நான்காவது வருடாந்த பொதுக் கூட்டம் மற்றும் புதிய இயக்குனர் குழு தெரிவிற்கான தேர்தல் கொழும்பு-7 கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிலையத்தில் 11.10.2014 சனிக்கிழமை  நடைபெற்றது.

இப்பதவிக்கென பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் ஒன்பது பேர் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். இதில் பலர் இறுதிநேரத்தில் வாபஸ் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் சிரேஷ்ட அரசியல்வாதிகளான  பலாங்கொடை நகரசபைத் தவிசாளர் நிமல் பிரேமதிலக மற்றும் ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா ஆகியோருக்கிடையில் போட்டி நிலவியதையடுத்து நாட்டிலுள்ள நாற்பத்து மூன்று உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது அதிகபட்சமாக 28  சிங்கள மற்றும் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் கிளிநொச்சி உள்ளிட்ட தமிழ் பிரதேச உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களின் வாக்குகளினால் ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா தலைமைப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் இத்தெரிவு நடைபெற்றது. நாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் மேம்பாடு மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற விடயங்கள் இச்சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கொருமுறை இத்தெரிவு நடாத்தப்படுவதுண்டு. இதேவேளை பொதுநலவாய நாடுகளின் தலைமைப்பதவியை இலங்கை ஜனாதிபதி வகிப்பதனால் பொதுநலவாய நாடுகளிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களி;;ன் இணையத்தின் தலைவராகவும் அலி ஸாஹிர் மௌலானா செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உள்ளுராட்சி மன்றப்பிரதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக சட்டரீதியாக அணுகும் ஒன்றியமாக இச்சம்மேளனம் கருதப்படுகிறது.

அலிஸாஹிர் மௌலானா சுமார் இருபத்தைந்து வருடகால அரசியல் அனுபவத்தைக்கொண்டவர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இவர் அமெரிக்க கலிபோனியா பல்கலைக்கழக கணினித்துறை பொறியிலாளராவார். இதேவேளை அலி ஸாஹிர் மௌலானா அமெரிக்காநாட்டின் இலங்கைக்கான உதவித்தூதுவராகவும்  சில காலம் பணியாற்றியுள்ளார்.