மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் கௌரவிப்பு நிகழ்வு -சம்பந்தனுக்கு தமிழர் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின்  முன்னாள் தலைவரும் தற்போதைய அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழர் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி, கல்லடி துளசிமண்டபத்தில் நடாத்திய வரவேற்பு வைபவத்தின் போதே அவர் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளராக தெரிவுசெய்யப்பட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் மற்றும் இதுவரை காலம் தமிழரசுக்கட்சியின் தலைவராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன்போது அதிதிகள் கல்லடி மணிக்கூண்டு கோபுரத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து நிகழ்வானது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் உப தலைவர் பூபாலபிள்ளையின் வரவேற்புரையுடன் ஆரம்பமானதுடன் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சோயோனின் தலைமையுரையும் இடம்பெற்றது.

புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் புதிய பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம் ஆகியோரும் இதன் போது பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து வாழ்த்துப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் வாழ்த்துப்பத்திரத்தையும், புதிய பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கத்துக்கான வாழ்த்துப்பத்திரத்தை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் வழங்கி வைத்தனர்.

தமிழரசுக்கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா இலங்கை தமிழரசுக்கட்சியின்  முன்னாள் தலைவரும் தற்போதைய அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு தமிழர் தாயகத்தலைமகன் என்னும் பட்டம் வழங்கி கிரீடத்தை சூட்டி கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா உட்பட கட்சி ஆதரவாளர்கள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.