மட்டக்களப்பு மறை மாவட்ட மறைக் கல்வி நடுநிலையம் நடத்திய மறைக் கல்வி கீதம் ஆக்கும் போட்டியில் மட்டக்களப்பு, இருதயபுரத்தைச் சேர்ந்த ஜூட் திலீபன் பிரான்சிஸ் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மறை மாவட்டம் இவ்வாண்டினை மனித உரிமைகள் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட மறைக் கல்வி நடுநிலையம் மறைக் கல்வி கீதம் ஆக்கும் போட்டியொன்றினை நடத்தியது.
இப் போட்டியில் மட்டக்களப்பு, இருதயபுரத்தைச் சேர்ந்த ஜூட் திலீபன் பிரான்சிஸ் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ம் திகதி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெறவிருக்கும் மனித உரிமை ஆண்டு நிறைவு நிகழ்வில் இவருக்கான பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரான ஜூட் திலீபன் பிரான்சிஸ் தனது பாடசாலைப் பருவத்திலிருந்தே பல பாடல்களை எழுதி இசையமைத்துள்ளமையுடன்;, 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் தொடர்பான பாடல்களை எழுதி இசையமைத்து 2005 முற்பகுதியில் தனது பாடசாலை சகபாடிகளின் துணையுடன் முதலில் இறுவெட்டாகத் தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது கவிதை ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் பிராந்திய பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
நூற்றுக்கு மேற்பட்ட கிறிஸ்தவ கீதங்களை இயற்றி அவ்வப்போது ஆலயத்தில் அளிக்கை செய்யும் இவர், பிரான்சிஸ் - றூபி வலன்ரீனா தம்பதியினரின் புதல்வராவார்.