கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமைவாய்ந்ததும் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதுமான மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.
மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப்பெயர்கெர்ண்டு உலகமெல்லாம் இரட்சத்துவரும் அன்னை மாரியம்மன் அகல் விளக்கு எரியவைத்த காலத்துக்கு முந்திய காலமாக மட்டக்களப்பில் அருள்பாலித்துவருகின்றாள்.
கிழக்கு மாகாணத்தில் காலத்தில் முந்தையதாக கணிக்கப்படும் கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் சக்திவாய்ந்த ஆலயமாகவும் இந்துக்களால் கருதப்படுகின்றது.
இன்று காலை விநாயகவழிபாடுகளுடன் யாகபூஜைகள் நடைபெற்று விசேட கும்ப பூஜைகள் நடைபெற்றதுடன் பிள்ளையாரடி புரவிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
இதன்போது கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் நடைபெற்றதுடன் மூலமூர்த்தி மற்றும் பாரிபால மூர்த்திகளுக்கு விசேட அபிசேக பூசைகளும் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்மனுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.
அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கொடித்தம்பத்துக்கு அருகில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் வேத,மேள வாத்தியங்கள்,நாதங்கள் முழங்கள அடியார்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்வேலனை பெருங்குளம் முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு சிவாகம கிரியாநிதி,தேவி பூஜாநிரந்தரர்,சிவாச்சாரிய திலகம் சிவஸ்ரீ தியாகராஜ கோகுல சிவாச்சாரியாரினால் இந்த மஹோற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டது.
10தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை சித்திரத்தேர் பவனி இடம்பெறவுள்ளதுடன் சனிக்கிழமை தீர்த்த உ;றசவம் நடைபெறவுள்ளது.