களுவாஞ்சிகுடியில் வீதிகளில் அலையும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில்; அண்மைக்காலமாக வீதிகளில் அலையும் கட்டாக்காலி மாடுகளினால் வீதி விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை கட்டுப்படுத்தும் வகையில் களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதன் கீழ் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் வழிகாட்டலில் பொலி;ஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்படி மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில்; களுவாஞ்சிகுடி நகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கட்டாக்காலி மாடுகளாக அலைந்து திரிந்த ஆறு மாடுகளை பிடித்துள்ளதுடன் அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தெரிவித்தார்.

கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வீதிகளில் மாடுகளை அலைய விடுவோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பல தடவைகள் மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கிய நிலையிலும் சிலர் தொடர்ந்து அவற்றினை உதாசீனம் செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டாக்காலி மாடுகளினால் விபத்துச்சம்பவம் அதிகரித்துவரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.