மேய்ச்சல் தரை காணிகளை அபரிக்க பேரினவாதிகள் முயற்சி தடுத்து நிறுத்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட  எல்லைக்குட்பட்ட செங்கலடி, கிரான் பிரதேச செயலகப்பிரிவில்  உள்ள  மேய்ச்சல் தரைக்காணிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் அத்துமீறி கைபற்றி ஆவணங்கள் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.அவ்வாறான நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செங்கலடி பிரதேசசெயலாளர்  பிரிவிற்குட்பட்ட  ஈரலக்குளம், கிராமசேவையாளர் பிரிவைச்சேர்ந்த  பெரிய மாதவணை, விளாவடிப்பொத்தானை, நெடியவட்டை கிராமங்களும் கிரான் பிரதேச  செயலாளர்பிரிவில் உள்ள குடிம்பிமலை (கி.சே.பி) மைலத்தமடு, சிறிய மாதவணை (மலமண்டி) மோளில்வள, வம்மிக்குளவட்டை, பூவட்டை ,தகரப்பொத்தானை போன்ற கிராமங்களில் உள்ள 5000 ஏக்கருக்கு மேற்பட்ட  கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைக்காணிகளை சுமார்  250 ற்கு மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்கள்  இராணுவத்தின் உதவியுடன் அத்துமீறிக் கைபற்றி விவசாயம் செய்து வருகின்றனர். மேற்குறித்த இவ்விடயம் தொடர்பாக பின்வரும் விடயங்களில் எமக்கு ஐயப்பாடு தோன்றியுள்ளது.

இக்காணிகளைத் தமக்கு உரிமை பாராட்டும் வகையில் முறைகேடான முறையில் ஆவணங்கள் தயாரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா?

அண்மைகாலத்தில்  இக்காணிகளை பொலநறுவை மாவட்டத்தின் அறுகம்பொல கிராம சேவையாளர் பிரிவின் கீழ் இணைப்பதற்கான  முயற்சிகள் மேற்க் கொள்ளப்பட்டுள்ளனவா?

இப்பிரதேசத்தில் இருக்கும் இராணுவமுகாமின் மூலம் கால்நடைக்கான மேய்ச்சல்தரைக் காணிகளை அத்துமீறி  தமிழ்ப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதன் மூலம் விவசாயம் செய்யும் பெரும்பான்மைச் சமூகத்திற்கு பாதுகாப்பளிக்கும்  மூலபாயமா ?

இவ்விடயங்களுக்கு மேலதிகமாக20-12-2013 அன்றும் அதன்பின்பும்   புத்தபிக்கு ஒருவர் வருகை தந்து தகரப்பொத்தானையில் உள்ள மேய்ச்சல் தரைபகுதியை 50 ற்கு மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவருக்கு பகிர்ந்தளிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்குகளை நிலைநாட்ட முடியாத சூழ் நிலையில் இராணுவ அணுசரணையுடன் ஒருபக்கச்சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நீதிக்குப் புறம்பான இந்நடவடிக்கைகள் மூலம் முற்றிலும் தமிழ் மக்களின் கால்நடைமேய்ச்சல் தரைக்காணிகள்  கபளீகரம் செய்யப்படுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் ஒருதலைப்பட்ட சமான அநீதியாகவே கருதுகின்றேன்.

எனவே இப்பிரதேசத்தில் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்ட  காணிகள் அனைத்தையும் ஏனைய கிராமசேவையாளர் பிரிவுடன் இணைக்கப்படப்போகும் காணிகளையும் மீளப்பெற்று கால்நடைப் பண்ணையாளர்களின் பாவனைக்கு விடுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஏன தெரிவிக்கப்பட்டுள்ளது.