
சுவாமி விவேகானந்தரின் ஜனன தினநிகழ்வுகள் எதிர்வரும் 12ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விபுவானந்தா அபிவிருத்தி நிலைய தலைவர் த.கயிலாயபிள்ளை தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்ற இந்நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் வருடந்தோறும் சிறப்புற நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலையடிவேம்பு இந்துமாமன்றமும், இந்து இளைஞர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் ,ந்தியாவின் மதுரையை சேர்ந்த வேதாந்த சர்வதேச அமைப்பின் ஸ்ரீமத் வேதாந்த ஆனந்த ஜி அருளாளராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
12ஆம் திகதி காலை விபுலானந்த அபிவிருத்தி நிலையத்தில் நடைபெறுகின்ற விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மாலை அணிவிக்கும் நிகழ்வும் பிற்பகல் 4மணிமுதல் அருளாளர்களினதும், சமயப் பெரியோர்களினதும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.
இவ்வாறான நிகழ்வுகள் அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு, கல்முனை, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.