தாதியியல் பட்டதாரி[B.Sc. Nursing] மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?

தாதியியல்  பட்டதாரி[B.Sc. Nursing] மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? அரசாங்கமும், சில தொழிற்சங்கங்களும்  ஏற்க மறுக்கும் காரணிகளும், இழுத்தடிப்புக்களும்:

பட்டதாரி தாதியர்கள்  இலங்கை தாதிய சேவையில் உள்வாங்கப்படாமை. கடந்த மார்கழி 12 ஆம் திகதி சுமார் 6000 மாணவ தாதியருக்கும் 3000 தாதிய உத்தியோகத்தர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டம் பட்டம் பெற்ற தாதியர், உட்பட மருத்துவ இணை சேவையை சேர்ந்த பட்டதாரிகளுக்கும்[B.Sc. Physiotherapy,B.Sc. Pharmacy, B.Sc. Medical Laboratory Sciences , B.Sc. Radiography] நியமனம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.எனினும்  தாதியப் பட்டதாரிகளின் நியமனம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அதே வேளையில் ஏனைய இணை மருத்துவ சேவையாளர்களின் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதே.

தாதிய தொழிற்சங்கம் ஒன்றை நாடாத்தி வருவதாக கூறும் இவர்கள் இந்த சுயநலவாத செயற்பாடுகளின் மூலம் யாரை திருப்தி செய்ய முற்படுகின்றனர்?தாதிய பட்டதாரிகளின் நியமனத்தின் மூலம் யாருக்கு தீமை வரப்போகிறது? இவர்கள் தமது வாதத்திற்க்கு ஆதாரமாக காட்டுவது இலங்கை அரசினால் 2013/11/19 வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட 1837/8 ஆம் இலக்கத்தை கொண்ட இலங்கை சனநாயக குடியரசின் வர்த்தமானிப் பத்திரிகையாகும்.அதன் சாரம் பின்வருமாறு கூறுகிறது.

" வருடாந்தம் பயிற்சி அளிக்க தேவைப்படும் விண்ணப்பதாரிகளில் 25% தாதியமாணி பட்டதாரிகளில் இருந்து தெரிவு செய்யப்படுவதுடன் அவர்கள் குறுகியகால அதாவது ஆறு மாத பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர்"

"பயிற்சிக்கு இணைத்துக்கொள்ளப்ப்படும்போது தாதிய பட்டதாரிகள் பொது உளச்சார்பு பரீட்சை ஒன்றில் தோற்ற வேண்டி இருப்பதுடன் பயிற்சி முடிவில் நடாத்தப்படும் பரீட்சையிலும் சித்தி அடைய வேண்டும்"

"மேலும் சேர்க்கப்படுவோரில் 5% ஆனோரே ஆண்களாவர்" இம்முறை நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தாதியமானி பட்டதாரிகள் 400 பேரில் அநேகமானோர் ஆண்களாக இருப்பதனால் இந்த நியமனம் நிறுத்தப்பட்டதாக கொக்கரிப்போரே உங்களிடம் சில கேள்விகள்.

• தாதியப் பட்டதாரிகள் சுமார் மூன்று முதல் நான்கு வருடங்கள் பல்கலைக்கழகங்களில் பயின்றே பட்டம் பெற்றனர்.அவர்கள் அங்கு உள்ளகப் பயிற்ச்சியும் பெற்றனர்.பின்னர் எதற்கு மீண்டும் பயிற்சி?சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் இது ஏனைய மருத்துவ துறை சார் கற்கை நெறிகளான மருந்தாளர் மற்றும் ஆய்வுகூடதொழில்நுட்பவியலாளர் போன்ற கற்கை நெறிகளிட்கு ஏன் நடைமுறையில் இல்லை?இது எமக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?

• கலை மற்றும் வர்த்தக துறை பட்டதாரிகள் எவ்வித நிபந்தனையுமின்றி அரச பணிகளில் சேர்க்கப்படுகையில் ஏன் எமக்கு மட்டும் இந்த அநீதி?

• இன்று வெளிநாடுகளில் பயின்று பட்டம் பெற்று வைத்திய மற்றும் பொறியியல் பட்டம் பெற்றோர் இலங்கை அரச துறைகளில் நியமனம் பெறும் பொது இலங்கை பல்கலைகழகங்களில் பயின்ற தாதியருக்கு ஏன் இந்த நிலை? அதுவும் உயர்கல்வி அமைச்சினாலும், சுகாதார அமைச்சினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடவிதானங்கள் இருந்தும்.அவ்வாறாயின் எமது பல்கலைக்கழகங்கள் தரமற்றவையா?

• பால்நிலை சமத்துவம் இன்று உலகளாவிய நிலையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் 5% ஆண் பிரதிநிதித்துவம் ஏற்புடையதா?

 • சர்வதேசிய அளவில் மகப்பேற்று தாதிய பயிற்சி இன்று ஆண்களுக்கும் வழங்கப்படுகிறது.இது சமுக ரீதியில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது.தாய்மையின் வேதனையினை ஆண்களும் புரிந்து கொள்கின்ற நிலையினையும் உருவாக்கி உள்ளது.இந்த நிலையில் உருப்படியற்ற இந்த கொள்கைகள் தேவையா?

• பரிணாம வளர்ச்சி நிலையில் தாதியமானது பட்டதாரி நிலைக்கு போக வேண்டியது அவசியம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு தாதியத்தை திப்லோமா சிறைக்குள்ளே வைத்திருக்கப் போகிறீர்கள்? உண்மையில் இன்று செய்ய வேண்டியது என்ன?

தாதியரிடையே பலத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கும் 1837/8 ஆம் இலக்க வர்த்தமானியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி தாதிய பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பதனால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம். சர்வதேச ரீதியில் இன்று தாதிய டிப்ளோமா என்பது இல்லை.அனைத்து நாடுகளிலும் தாதிய இளமாணி பட்டமே அடிப்படை தகுதியாக கொள்ளப்படுகிறது.எமது தாதிய சேவையையும் பட்டதாரி மட்டத்திற்கு உயர்த்துவதன் மூலம் இலங்கை தாதிய சேவையும் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தப்படும்.

மேலும் தாதியமாணி கற்கை நெறியானது ஆங்கில மொழி மூலமே நடாத்தப்படுவதனால் தாதியரின் ஆங்கில அறிவு விருத்தியாவதுடன் எமக்கான வேலைவாய்ப்புக்களை சர்வதேச மட்டத்தில் அதிகரித்துக் கொள்ள முடியும். இன்று டிப்ளோமா பட்டத்துடன் கடமை செய்யும் தாதியர், பட்டதாரிகளை நியமனம் செய்வதன் மூலம் தங்களது மதிப்பும் மரியாதையும் சென்று விடும் என அச்சம் கொள்ளலாம்.

இது ஒரு அடிப்படையற்ற வாதமாகும்.உதாரணமாக இலங்கை ஆசிரிய சேவையை எடுத்துக் கொள்வோம்.ஆசிரியர்களில் பல வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.பயிற்றப்பட்ட,பயிற்றப்பாடாத,பட்டதாரி ஆசிரியர்கள் என உள்ளனர்.அவர்களின் தகுதிக்கேற்ப சம்பளங்களும் வேதன ஏற்றங்களும் நிலைப்படுத்தப்பட்டுள்ளன.எனினும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றவர்களை அடக்குவதாகவோ அல்லது மற்றவர்கள் பட்டதாரிகளை சேவையில் இணைக்க வேண்டாம் என்று கூறுவதாகவோ செய்திகள் ஏதும் இல்லை.அனைவரும் கற்பிக்கும் செயற்பாடுகளை ஒற்றுமையாக முன்னெடுக்கின்றனர்.தாதிய சேவையும் இவ்வாறே.

பட்டதாரிகளும் டிப்ளோமா தாதியரும் தமது செயற்பாடுகளை ஒற்றுமையாக முன்னெடுக்க முடியும்.ஒருவர் தாதிய கலாநிதி பட்டம் பெற்று வந்தாலும் அவரின் கடமை என்பது நோயாளரை பராமரிப்பதே அன்றி வேறில்லை. தகமை என்பது எமது திறமை மூலம் அடையப்படுவது.

உண்மையில் தாதிய பட்டதாரிகளை தாதிய சேவையில் இணைப்பதன் மூலம் ஏனைய தாதியருக்கு இரு வழிகளில் நன்மை உண்டு.ஒன்று ஏனைய தாதியரும் தமது தராதரத்தை கூட்டிக்கொள்ள எதுவாக இது அமையும்.மற்றையது பட்டதாரிகளின் வேதன அதிகரிப்புக்கு ஏற்ப ஏனையோரும் தங்கள் சம்பளங்களை உயர்த்திக்கொள்ளலாம். உண்மையில் பட்டதாரிகளை சேவைக்கு உள்ளீர்ப்பு செய்வதனால் எமக்கான நன்மைகளே அதிகம்.

எமது கிழக்கு பல்கலைகழகத்திலும் தாதிய பட்டப்படிப்பை முடித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் எமது பட்டதாரிகளுக்கு எமது கிழக்கின் அரசியல்வாதிகள் அவர்களை  சுகாதாரத்துறையில் இணைக்க  தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?