மறைந்த மாமனிதர் மர்{ஹம் எம்.எச்.எம்.அஸ்றபின் கனவை நனவாக்கும் கல்முனை ஐக்கிய சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் கல்முனை மாநகரில் இடம்பெற்றது.
இரவு நேரத்திலும் இயங்கச் செய்யும் வகையில் வர்த்தக மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் மேம்படுத்தும் நோக்கில் மாநகர மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு கொரிய நாட்டு கொய்கா நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.
ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் சகிதம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கொய்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை கடந்த மாதம் கொழும்பிலுள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்கா தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
கல்முனை மாநகர மேயர் நிஸாம் காரியப்பரால் முன்மொழியப்பட்ட கல்முனை மாநகரின் மத்தியில் அமையப்பெறவுள்ள ஒற்றுமை சதுக்க அபிவிருத்திப் பணிக்கு கொய்கா நிறுவனம் முதற்கட்டமாக 3.3 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அபிவிருத்திப் பணியினை உடனடியாக ஆரம்பிப்பதற்கு 2 மில்லியன் ருபாவிற்கான காசோலையினை ஆசிய மன்றப் பணிப்பாளர் கலாநிதி கோபாகுமார் தம்பி கல்முனை மாநகர மேயர் நிஸாம் காரியப்பரிடம் கையளித்திருந்தார்.
கல்முனை மாநகர மத்தியில் அமையப்பெறவுள்ள ஐக்கிய சதுக்க அபிவிருத்திப் பணிக்காக கல்முனை தனியார் பஸ் நிலையத்திற்கு கிழக்கு புறமாகவிருந்த கட்டடங்கள் அனைத்தும் கடை உரிமையாளர்களின் விருப்பத்திற்கு அமைய கல்முனை மாநகர சபையின் பாரிய இயந்திரங்களின் துணையுடன் கடந்த திங்கட்கிழமை உடைத்து தரைமட்டமாக்கப்பட்டன.
இன்று இடம்பெற்ற ஐக்கிய சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்விற்கு கல்முனை மாநகர மேயர் நிஸாம் காரியப்பர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர்அலி, ஏ.எம்.றியாஸ் (பெஸ்டர்), இஸட்.ஏ.எச்.றஹ்மான், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, ஆசிய மன்ற நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், கல்முனை மேயரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், ஆகியோருடன் கல்முனைப்பிரதேச விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.








