2011 வெளிவாரி பட்டப்படிப்பினை பூர்த்திசெய்தவர்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கை - மகஜரும் கையளிப்பு

2011ஆம் ஆண்டு வெளிவாரி பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த மாணவர்கள் தங்களுக்கு இதுவரையில் பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கப்படவில்லையெனவும் தங்களுக்கு நியமனங்களை பெற்றுத்தர நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு மாவட்;ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சென்ற மேற்படி பட்டதாரிகள் இது தொடர்பான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்கள்,

தங்களது பட்டப்படிப்பு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பட்டதாரிகள் உள்ளீப்பதற்காக வழங்கிய காலக்கெடுவுக்கு உட்பட்டது.எமது பரீட்சைகள் விரிவுரையாளர்கள் ஐந்து மாதம் மேற்கொண்ட தொடர்ச்சியான பகிஸ்கரிப்பு காரணமாக பின்தள்ளப்பட்டது.எனினும் நாங்கள் சுற்றுநிருபத்துக்கு உட்பட்ட காலப்பகுதியில் எங்களது பட்டப்படிப்பினை நிறைவுசெய்துள்ளோம்.

எனினும் எமது நியமனங்கள் தொடர்பில் இதுவரையில் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.2011 டிசம்பர் 31ஆம் திகதி எமது பட்டப்படிப்பினை நாங்கள் நிறைவுசெய்துள்ளோம்.இவ்வாறு நிறைவுசெய்த சுமார் 150 மாணவர்களுக்கு இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

எமது நியமனங்கள் தொடர்பில் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத விடத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தவேண்டிய நிலை உருவாகலாம் எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதேநேரம் பட்டதாரிகளை சந்தித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா,இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருக்கு கொண்டுசெல்வதாகவும் உறுதியளித்தார்.