வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களும், அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சு தொடர்பில் இன்று (19) பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் யுத்தம் முடிந்து 2009ம் ஆண்டுக்குப் பின் முன்வைத்து அனைத்து வரவு செலவுத் திட்டத்திலும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான வீட்டுத் திட்டம் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. யுத்த காலத்தில் பங்களிப்பு செலுத்திய பாதுகாப்பு படையினர், பொலிஸார், அரச ஊழியர்களுக்கு வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டம் இல்லை.
இந்திய வீட்டுத் திட்டமும் வடக்கு, கிழக்கு மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடமைக்க ஒரு லட்சம் கொடுக்கின்றனர். ஒரு லட்சம் ரூபாவில் இன்று ஒரு மலசலகூடம் அமைக்க முடியாது.
இதேவேளை, யாழ். வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். கல்வித் தகைமை இல்லாவிடினும் யுத்த காலத்தில் அவர்கள் ஆற்றிய பணி பெறுமதியானது.
மேலும் மலையக மக்களுக்கு 50,000 மாடி வீட்டுத் திட்டம் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. மலையக மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் நோக்கத்தில் இத்திட்டம் முன்வைக்கப்படவில்லை. அவர்களுக்கு வீடு இல்லாமல் செய்யவே இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சொந்த காணியுடன் வீடு கோரும் மலையக மக்கள் மாடி வீடு கொடுத்தால் வேண்டாம் என சொல்வார்கள் என்று தெரிந்தே அரசாங்கம் இவ்வாறு செய்கிறது.இவ்வாறு பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.