(வி.சுகிர்தகுமார்)
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நேற்று(24) காலை 9மணியளவில் கலாசார மண்டபத்தில் தவிசாளர் கே.இரத்தினவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 5உறுப்பினர்களுடன் ஆளுங்கட்சியாக செயற்பட்டுவரும் பிரதேச சபையில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்(2) இருவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி(01)ஒருவரும், சுயேற்சை உறுப்பினர்(01) ஒருவருமாக 9பேரும் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னதாக ஆளுங்கட்சியில் தவிசாளர் தவிர்ந்த நால்வரும் தவிசாளருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரவு செலவுத்திட்டத்தை ஆதரிக்க மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கட்சி தலைமையினுடைய வேண்டுகோளுக்கமைய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் முதல்நாள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கலாக கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுவொன்று அக்கரைப்பற்றிற்கு வருகை தந்து ஏனைய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் அறியமுடிகின்றது. கடந்த மாதாந்த கூட்டங்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபோதும் எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு தவிசாளரினால் கூட்டங்கள் நடாத்தப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.