‘சாதனை படைத்த மாணவிக்கு ஏற்பட்ட சோதனை நிகழ்வு’

அதிக மகிழ்ச்சி ஏற்படும் போது சோகமும் கூடவே வரும் என பலரும் கூறுவதை கேட்டுள்ளோம். அத்தகைய சம்பவம் அக்கரைப்பற்று தீவுக்காலை மாணவி ஒருவருக்கு நேற்றையமுன்தினம்(22) நடைபெற்றது.
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த.உயர்தரப்பரீட்சையின் முடிவின் பிரகாரம் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் கல்விகற்ற தீவுக்காலை பிரதேசத்தை சேர்ந்த விஸ்வலிங்கம் தனிஷ்கா எனும் மாணவி கலைப்பிரிவில் தோற்றி 2ஏ 1பி பெறுபெற்றை பெற்று 2.1876 வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் 3ஆவது இடத்தையும் தேசிய மட்டத்தில் 78ஆவது இடத்தையும் பிடித்தார்.

பின்தங்கிய கிராமமும் வறுமையான குடும்பத்தையும் சேர்ந்த அவரின் பெறுபேற்றை பெற்றோர் மாத்திரமல்லாது அக்கிராமமே கொண்டாடியபோதே அத்துயரச் சம்பவம் நடைபெற்றது.

மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தனக்கு கல்விகற்பித்த ஆசிரியையை சந்தித்து ஆசி பெற்று தனது தோழியுடன் நேற்றையமுன்தினம்(22) மாலை 6.10மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த மாணவியின் கழுத்திலிருந்த 2பவுண் தங்கச் சங்கிலியையும் பென்டனையும் அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.

செய்வதறியாது திகைத்து நின்ற மாணவி அழுதவாறே பெற்றோரின் உதவியோடு அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டை பதிவு செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தை பற்றி குறிப்பிடும் போதே அம்மாணவியின் கண்கள் குளமானது அனைவரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்தது.