வன்னியிலிருந்து அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பில் 2009ஆம்ஆண்டு மீளக் குடியமர்த்தப்பட்ட எங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகள் கிடைக்கும் என எதிர்பார்த்தும் கிடைக்கவில்லை என அம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யுத்தம் காரணமாகப்பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பில் 2009ஆம்ஆண்டு மீளக் குடியமர்த்தப்பட்ட உள்ளுரில் இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய மக்கள் தாம் இன்னமும் தற்காலிக வீடுகளிலேயே வசித்துவருவதாக மட்டக்களப்பு பிரஜைகள் சபையிடம் முறையிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சபையின் தலைவர் வ.கமலதாஸ் தலைமையில் நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்திலேயே இவ் மக்கள் முறைப்பாடுகளைத் தெரிவித்தனர்.
இதன் போது, மட்டக்களப்பின் மண்முனைப் பற்று - ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில், ஆரையம்பதி, தாளங்குடா, கிரான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வசித்துவரும் உள்ளுரில் இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய மக்களே இந்த முறைப்பாட்டினைத் தெரிவித்தனர்.
வன்னியில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு 2009ஆம்ஆண்டு அரசினால் மீளக்குடியமர்த்தப்பட்டபோது, தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு தகரம், கினிசெப் மரங்களும் வழங்கப்பட்டன. அக்கொட்டகை 2010ஆம்ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. ஆனாலும் அந்தக் கொட்டகைகளிலேயே வாழ்ந்து வருகிறோம்.
இந்திய அரசினால் வழங்கப்படும் நிரந்தர வீடுகள் எங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். இது தொடர்பில் அரச அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போதும் சாதக பதில் வழங்கப்படவில்லை.
இந்திய வீட்டுத்திட்டத்திலோ வெறு வகையிலோ எங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துத் தருவதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள்.
அதே நேரத்தில் குடிநீர், மலசலகூடம், மின்சாரம் உன அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் மாதாந்தக் கூட்டத்தில், சிப்பி மடு பிரதேசத்தில் மீளக் குடியேறிய சிங்கள மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல், அவர்களுடைய இருப்பிட வசதிகள் குறித்தும் கலந்துரையடப்பட்டது. இது தவிரவும் பொது மக்கள் சார்ந்து மேற்கொள்ளப்படவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள், பிரஜைகள் சபையின் பிரதேச குழுக்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.

.jpg)
