அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமும் இன்று ஒரு வாக்கினால் தோல்வியை தழுவியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தவிசாளராக செயற்படும் ஆனந்தன் எதிர்த்து வாக்களித்ததன் காரணமாக வரவு-செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.
ஏழு உறுப்பினர்களைக்கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபையில் நான்கு உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஏனைய இருவரும் அரச தரப்பினையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியையும் சேர்ந்தவர்களாவர்.
இந்த நிலையில் நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று தவிசாளா குணரெட்னத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில் உபதவிசாளர் எதிராக வாக்களித்தார்.
கடந்த காலத்தில் நாவிதன்வெளி பிரதேசசபைக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களையும் உபதவிசாளர் நடத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.
