உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் மகிழூரில் சிசுவின் சடலம் மீட்பு(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர்,நாகபுரம் பகுதியில் உள்ள பற்றைக்காடு பகுதியில் பிறந்து சில மணி நேரங்களேயான சிசு ஒன்று உரப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் நாகபுரம் முருகன் ஆலயத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காடுகள் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் இதனைக்கண்டு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து இச்சடலம் மீட்கக்பட்டுள்ளது.

அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பெண் இந்த உரப்பையினை அப்பகுதியில் வீசிச்சென்றதாக பொலிஸாரிடம் சம்பவத்தினை நேரில் கண்டவர் தெரிவித்தார்.

பிறந்து சில மணி நேரங்களிலேயே குறித்த சிசு அப்பகுதியில் உயிரிழந்த நிலையில் உரப்பையில் சுற்றப்பட்டு அப்பகுதியில் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிசு எப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டு மற்றும் அதனை வீசிச்சென்றவர் தொடர்பிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தலைமையிலான பொலிஸார் இது தொடர்பிலான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.