கிழக்கின் சில பகுதிகளில் வெள்ள அபாயம் -சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு - பாண்டிருப்பில் நூறு வருட பழமையான மரம் சரிந்து வீழ்ந்தது

(செ.துஸ்யந்தன்)

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மூன்று மாவட்டங்களிலும் அம்பாறை மாவட்டம் வெள்ள அனர்த்தங்களினால் பெரும் பாதிக்கப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழைபெய்துவருகின்ற நிலையிலும் இதுவரையில் வெள்ள அனர்த்த அபாயங்கள் எதுவும் ஏற்படவில்லையென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் கல்முனை - அம்பாறை வீதியின் மாவடிப்பள்ளி ஆற்று வெள்ளம் பிரதான வீதியை குறுக்கறுத்து ஓடுவதன் காரணமாக போக்குவரத்துகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று கிட்டங்கி ஊடாகவும் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேநேரம் கல்முனை,பாண்டிருப்பு பகுதியில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற தலமான திரௌபதையம்மன் ஆலய வளாகத்தில் நின்ற நூற்றாண்டு பழமையான மரம் இன்று சாய்ந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு வாவியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளபோதிலும் வெள்ள அபாயம் இதுவரையில் ஏற்படவில்லை.சில தாழ்வுப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.