மட்டக்களப்பு மாவட்டத்தில் 4000 பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகரித்து நலிவு நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 4000 பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்கென கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புகளுக்கு உள்ளான மண்முனை மேற்கு மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் தொடர்பில் அறிவூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் வள அபிவிருத்தி நிலையத்தின் வளவாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் பிரதேச செயலாளர்கள்,திட்டமிடல் பணிப்பாளர்கள்,பெண் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சேவ்த சில்ரன் மற்றும் வை.எம்.சி.ஏ ஆகியவற்றின் அனுசரனையுடன் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் சிறு கைத்தொழில் செய்யும் 3000 பெண்கள் அவர்களின் தொழில் முயற்சியை அதிகரிப்பதற்கான சந்தை வாய்ப்புகள் மற்றும் சிறந்த உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் வலுவூட்டப்படவுள்ளதுடன் 1000 வறுமை நிலையில் உள்ள பெண்கள் புதிய உற்பத்திகளை மேற்கொள்ளும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பிரதேசங்களில் உள்ள வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அவற்றினை சிறந்த முறையில் மேற்கொள்ளுவதன் மூலம் வெளியில் இருந்து பொருட்களை இறக்குமதி நடைமுறையினை இல்லாமல் செய்யும் வகையிலான நடவடிக்கைகள் இதன்மூலம் மேற்கொள்ளமுடியும்.

குறிப்பாக பால் உற்பத்தி,விவசாயம்,வீட்டுத்தோட்டங்களில் பெண்களின் தொழில் முயற்சியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் வறுமை நிலையில் முதல் இடத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை சிறந்த வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுவரமுடியும் இங்கு தெரிவிக்கப்பட்டது.