மொறிஷியஸில் கடந்த 11ம் 12ம் திகதிகளில் நடைபெற்ற நான்காவது உயிர்தொழில்நுட்பவியல் சர்வதேச மாநாட்டில்(International Conference in Biotechnology –
2013) மிகச்சிறந்த வாய்மூல வழங்குனருக்கானBest Oral Presenter) விருதினை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளரான திருமதி. சந்திரகாந்தா மகேந்திரநாதன் பெற்றுள்ளார். மொறிஷியஸின் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இச்சர்வதேச மாநாட்டில் அந்நாட்டின் மூன்றாம் நிலைக்கல்வி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் மொறிஷியஸிற்கான இந்தியத் தூதுவர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டமை முக்கிய விடயமாகும்.
“சிறந்த எதிர்காலத்திற்காக உயிரியல் தொழில்நுடபம்”; (Biotechnology for Better
Tomorrow-BTBT 2013) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுமார் 90 ற்கும் அதிகமான பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வுகளை வெளியிட்டனர்.
இதன்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சார்பில் திருமதி. சந்திரகாந்தா மகேந்திரநாதன் கலந்து கொண்டு வழங்கிய தமது ஆய்வுக்கட்டுரைக்கு மேற்படி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



