அதிலும் இளம் பராயத்தினர் தமது உள்ளக்கிடங்குகளை குறும்படங்களாக சமூதாய சிந்தனையுடன் வெளியிட்டுவருவது பெருமைக்குரிய விடயமாகும்.
இதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மாணவர்களின் சிந்தனையில் உதித்த “அப்துல்கலாம் என்ன சொன்னாரு” எனும் குறுந்திரைப்படமொன்று ஞாயிறு(17.11.2013)மாலை மட்டக்களப்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்த குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு வைபவம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வெளியீட்டு வைபவத்தில் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஏ.பிறேம்குமார், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பிரதி அதிபர் ஆர்.பெஸலியோ வாஸ், மண்முனை மேற்கு உதவிக் கல்விப்பணிப்பாளர் பி.ரவிச்சந்திரன், அருட்தந்தை எம்.ஸ்ரணிஸ் லொஸ் திருமறைக்கலா மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினர் எஸ்.வள்ளுவன் உட்பட முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பி.கொன்ஸ்ரன் கிhசன் எனும் மாணவர் இந்த குறுந்திரைப்படத்தின் இயக்குனராக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
விடா முயற்சி எவ்வாறு வெற்றியை ஏற்படுத்தும் என்பதை சித்தரிக்கும் வகையில் கல்வியை விடாது கற்பதன் மூலம் ஏற்படும் நன்மை குறித்தும் இந்த குறுந்திரைப்படம் சித்தரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பினை நிரோஸன் மேற்கொண்டுள்ளதுடன் இசையினை இசையமைப்பாளர் ஜனனி செய்துள்ளார்.ஒளிப்பதிவினை விபுசனும் வசனம் மற்றும் பாடல்களை லோஜன் இயற்றியுள்ளார்.இந்த திரைப்படத்தில் இணை இயக்குனராக விஸ்ணுஜன் பணியாற்றியுள்ளார்.
சிறந்த சமூக படைப்பாக உருவாகியுள்ள இந்த படைப்பின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.எனினும் இந்த வெளியீடு மற்றும் உருவாக்கங்களில் உள்ள சில குறைபாடுகள் தொடர்பில் தெரிவிக்கவேண்டிய கடப்பாடும் எங்களுக்குள்ளது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பில் நடைபெற்ற அனேக குறும்பட வெளியீட்டுக்கு சென்றுள்ளேன்.அங்கு அவர்கள் மேடைகளில் ஏறி பேசும்போது முற்றுமுழுதாக தென்னிந்திய பேச்சு தமிழுக்குள் மூழ்கியுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.
நமது இளம் சமூதாயம் சிறந்த பணிகளை மேற்கொண்டுவரும்போது அவர்கள் சரியான முறையில் வழி நடாத்தப்படாமையே இது காரணமாக இருக்கலாம் என நிகழ்வொன்றுக்கு வந்த மட்டக்களப்பு கலைஞர் ஒருவர் தெரிவித்தார்.
எமது பண்பாடு,மொழி ஆகியவற்றைக்கொண்டதாக படைப்புகள் வெளிவரும்போதே அது ஆரோக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.சில குறும்படங்களில் சம்பாசனைகள் தென்னிந்திய பேச்சை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதும் கவலையளிப்பதாகவுள்ளது.
எதிர்கால படைப்புகளை வெளியிடுவோரும் அதனுள் உள்வாங்கப்படுவோரும் எமது மாவட்டத்தின் அனைத்து விடயங்களையும் அறிந்திருப்பது சாலச்சிறந்தது.