வாழைச்சேனை, வாகனேரி - குடாமுனைக்கல் பகுதியில் வீதியின் ஓரத்தில் சொப்பிங் பேக்கில் போடப்பட்ட நிலையில் கைக்குழந்தையொன்றின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மாடு மேய்த்துக் கொண்டுவந்த சிறுவர்கள் மூவர் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு பார்த்தபோது சொப்பிங் பேக்கில் போடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு வாகனேரி பிள்ளையார் கோவில் தலைவரிடம் சென்று தெரியப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அவர் கிராம சேவகரின் உதவியுடன் வாழைச்சேனை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட – நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.எம்.ஹ_ஸைன் குழந்தையின் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு விடுத்த உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சொப்பிங் பேக்கில் போடப்பட்ட நிலையில் போடப்பட்ட குழந்தை குறை மாதத்தில் பிறந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பிரதேசத்திற்குப் பொருப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.