கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சி நடைபெறவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இந்த மாகாணத்தில் சிவில் நிருவாகமே நடைபெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேய்ச்சல் தரை தொடர்பான கூட்டத்தில் மட்டக்களப்பில் இராணுவ ஆட்சியே நடப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன்,
"கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் கடந்த கூட்டத்தில் இந்த மேய்ச்சல் தரை நிலம் விவகாரம் பேசப்பட்ட போது அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட இராணுவ அதிகாரி மாடுகளை கொண்டு செல்பவர்களின் பெயர் விபரங்களை தந்தால் அதற்கான அனுமதியினை வழங்குவோம் என்றார்.
அந்த அடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்பு பண்ணையாளர்கள் தமது மாடுகளை மேய்ச்சல் தரை நிலங்களுக்கு கொண்டு சென்ற போது இங்கு விவசாயம் செய்யப்படுவதாக படை அதிகாரிகள் கூறி துரத்தியுள்ளனர்.
படை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அத்து மீறி மேய்ச்சல் தரை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு மாங்காடு மற்றும் குருக்கள்மடத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களை கண்டித்து கண்டன பேரணியொன்று நடாத்துவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியும் இராணுவத்தினர் அதை தடுத்தனர். இவைகள் எல்லாம் இங்கு இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என்பதை காட்டுகின்றது" என்றார்.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா குறுக்கிட்டு உங்களின் இந்த கூற்றை மறுக்கின்றேன். "இங்கு இராணுவ ஆட்சி நடைபெறவில்லை. நீங்கள் அரசியல் செய்வதற்காக இவற்றை கூறுகின்றீர்கள். உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்ளமுடியாது" என்றார்.
அத்துடன் இங்கு மாவட்ட செயலாளர்? பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் என சிவில் நிருவாக ஆட்சியே நடைபெறுகின்றது. இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்ற கூற்றை முற்றாக நான் மறுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது பிரதியைமச்சர் ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் ஆகியோருக்கு இடையில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.