நிரந்தர அமைதிக்கும், நிம்மதிக்கும், சமாதானத்துக்குமான வழியை தீபாவளித்திருநாள் கொடுக்கட்டும் -கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜனா

எமது மக்களின் நிரந்தர அமைதிக்கும், நிம்மதிக்கும், சமாதானத்துக்குமான வழியை தீபாவளித்திருநாள் கொடுக்கட்டும் என பிரார்த்திப்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தீபாவளி இந்துக்களினால்  கொண்டாடப்படுகின்ற மிக முக்கியமானதொரு பண்டிகையாக விளங்குகின்ற போதிலும் இந்துக்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படுகின்ற இதுபோன்ற பல்வேறு பண்டிகைகளும் விரதங்களும் சிறப்புமிக்கவையாக விளங்குகின்றன.

அந்த வகையில் தீபாவளிப் பண்டிகை எடுத்து இயம்புகின்ற தத்துவம் உலக மானுடர்கள் அனைவருக்கும் பொதுவான விதியாகவும் விளங்குகிறது.

வரலாற்றிலும் இந்துக்களின் பாரம்பரியத்திலும் மக்களுக்கு இன்னல் விளைவித்துக் கொண்டிருந்த நரகாசுரனை கிருஸ்ண பரமாத்மா வதம் செய்தமையால் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதாவே தீபாவளித்திருநாள் போற்றப்படுகிறது.

அதே நேரம், தன்னை வதம் செய்தவேளை ஞானம் பெற்று தன்னிலிருந்த இறுமாப்பு, அகந்தை, ஆணவம் அழித்து பரம்பொருளின் சத்தியத்தையும் வாழ்வின் தத்துவத்தையும் உணர்ந்து அந்நாளை பெருநாளாகக் கொண்டாட வேண்டும் என நரகாசுரன் வேண்டிக்கொண்டதாகவும் இந்துமதம் கூறுகின்றது..

எமது நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த கால கொடிய யுத்தங்கள் நிறைவு பெற்று தற்போது அபிவிருத்தியுடனான சமாதானம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும் நரகாசுரன் போன்றவர்களின் உணர்வுகளால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தே வருகின்றனர்.

எமது மக்களின் கண்ணீரிலும் அவலத்திலும் குளிர்காயஎண்ணும் நரகாசுரன்களே அதிகம் எம்மண்ணில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அழிவே உண்மையான தீபாவளியாகும்.

அந்த வகையில், நமக்குள் இருக்கும் பொறாமை, வேற்றுமை மனோபாவம், அகந்தை, ஆணவம் உள்ளிட்ட தீய குணங்களை அழித்து ஒற்றுமை, சமூகபற்று கொண்ட மகிழ்ச்சியையும் அமைதியையும் இந்தத் தீபாவளி கொண்டுவரட்டும்.

இந்த இடத்தில் எமது மக்களின் நிரந்தர அமைதிக்கும், நிம்மதிக்கும், சமாதானத்துக்குமான வழியை தீபாவளித்திருநாள் கொடுக்கட்டும் என பிரார்த்திப்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.