கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை சாய்ந்தமருதில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் பிசுபிசுத்து போயுள்ளது.
கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் பிறந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு நேற்று இரவு சாய்ந்தமருது அனைத்து பொது மக்கள் சம்மேளனம் எனும் பெயரில் அத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது
எனினும் சாய்ந்தமருது நகரில் இன்று காலை தொடக்கம் ஒரு சில கடைகளைத் தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டு- வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.
இதே வேளையில் தனியார் நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. பொதுச் சந்தையும் வழமை போன்று இயங்கி வருகிறதுடன் போக்குவரத்து சேவைகளும் பொது மக்களின் அன்றாட அலுவல்களும் வழமை போன்று இடம்பெறுகின்றன.
பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகாளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.