மட்டக்களப்பின் வளமான காணிகள் யாருக்கும் தெரியாமல் வர்த்தமானி படுத்தும் நடவடிக்கை –தடுத்து நிறுத்துமாறு அரச அதிபருக்கு கடிதம்

மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ள வளமான அரசகாணிகள் அனைத்தும் யாருக்கும் தெரியாமல் வனப்பிரதேசமாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் அவற்றினை மீளாய்வுசெய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2013.7.26ஆம்திகதிய 1820ஃ-28 இலக்க அதிவிசேட வர்த்தமானி பிரசுரம் முலம்  சுற்றாடல், புதுப்பிக்கதக்க சக்திஅமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜெயந்த அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகனேரி ஒதுக்குக்காடு -2583 ஹெக்டயர் ,தொப்பிக்கல் ஒதுக்குக்காடு 25256 ஹெக்டெயர்,உன்னிச்சை ஒதுக்;குக்காடு 7334 ஹெக்டெயர், பனிச்சங்கேணி ஒதுக்குக்காடு 9303 ஹெக்டெயா,; மொத்தமாக  44476 ஹெக்டெயர் (109855 ஏக்கர்) நிலப்பரப்பு மேற்படி வர்த்தமானி பிரசுரத்தின் மூலம் வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோரளைப்பற்றுதெற்கு (கிரான,;) கோரளைபற்று வடக்கு (வாகரை) மன்முனைமேற்கு (வவுணதீவு) ஏறாவுர்பற்று (செங்கலடி), ஆகிய பிரதேசசெயலகபிரிவுகளைச் சேர்ந்த  கால் நடைக்கான மேய்ச்சல்தரை காணிகள்,மானவாரி வயல்நிலங்கள், சேனைப்பயிர்செய்கை நிலங்கள்,குடியிருப்புக் காணிகள் அடங்கலாக எல்லைகள குறிப்பிடப்பட்டு பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது .

இதன் மூலம் இக்காணிகளுக்குரிய நடவடிக்கைகள் யாவும் மாகாணசபை ஊடாக பிரதேசசெயலாளர்களினால் நிhவகிக்கப் படுவது   தடுக்கப்பட்டு நேரடியாக மத்தியரசின் கீழ் இயங்கும் வனத்திணைக்களத்தின் கீழ்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டு;ம் மத்தியரசின் அனுமதி இல்லாமல் இக்காணிகளை யாரும் கையாள முடியாது. இந்த நடவடிக்கை இம்மாவட்டத்தின் அரசாங்கஅதிபர் இருந்து பொதுமக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் தெரியாமல்  செய்யப்பட்டுள்ளது.

எனவே யுத்தகாலத்திற்கு முன்பு இருந்து மக்களால் பயன்படுத்தப் பட்டு வந்த காணிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அவை வழங்கப்பட்டு மீதமுள்ள காட்டுப் பிரதேசம் மாத்திரமே வனத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்படவேண்டும்.

எனவே இதை மீள பரசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க ஆவன  செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் .