வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்தக் காலகட்டத்தில் மாதம் ஒன்றிற்கு 375 ரூபாயுடன் அரசாங்க ஊழியத்தைப்பெறும் அரச ஊழியர்களும் இந்த நாட்டில் வாழ்வது வியப்பாகவே உள்ளது.
மட்டக்களப்பு மண்டூர் வைத்தியசாலையில் காவலாளிகளாகக் கடமையாற்றி வந்த இருவரும் பலவருடக்கணக்கில் ஒருவருக்கு 375 ரூபாய் என்ற அடிப்படையிலே மாதச் சம்பளத்தினைப்பெற்று குடும்ப வாழ்க்கையை நடத்திவருகின்றார்கள்.
இவர்களில் ஒருவர் பகல்நேர காவலாளியாகவும் மற்றவர் இரவு நேரக்காவலாளியாகவும் கடமை புரிந்து வந்தவேளையிலே இவர்கள் இருவரும் தங்களை நிரந்தரமாக்கக்கூறி பலமுறை சுகாதார உயர் அதிகாரிகளிடம், அரச அமைச்சர்களிடமும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமும் பல தடவை முறையிட்டும் இதுவரைக்கும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.
இது இவ்வாறு இருக்கும் போது இவர்களுக்குக்கிடைத்து வந்த மாதம் ஒன்றிற்கான 375 ரூபாயையும் தற்போது கொடுக்காமல் இடைநிறுத்தி வைத்திருக்கின்றார்கள் இதற்கான காரணத்தினை அவர்கள் உயரதிகாரிகளிடம் கேட்டபோது தற்போது சம்பளம் தருவதற்கான 375 ரூபாய் நிதி தங்களிடம் இல்லை எனவும் கூறியிருக்கின்றார்கள்.
பல வருடங்களாக கிடைத்து வந்த 375 ரூபாயையும் கொண்டு என்னதான் செய்யமுடியும் என்று எண்ணி இருந்த வேளையில்தான் அதனையும் இடைநிறுத்தி வைத்திருக்கின்றார்கள். என மனவேதனையடைகின்றார்கள்.
சுமார் 08 வருடங்களுக்கும் மேலாக இவ்வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தோம் என்றும் தங்களுக்கு பிற்பாடு ஏனைய இடங்களில் தற்காலிகமாக உள்ளீர்க்கப்பட்டவர்கள் நிரந்தரமாக்கப்ட்டு விட்டார்கள் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
தங்களது பிரச்சினைகள் பற்றியும் தாங்கள் 8 வருடங்களுக்கும் மேலாக இவ்வைத்திய சாலையில் தொழில்புரிந்து வருவதாகவும் உரிய உயரதிகாரிகளுக்கு பலதடவைகள் அறிவித்தும் இதுவரைகாலமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதிதாக நியமனங்களை கொடுக்கின்றார்களே தவிர தங்களுக்கான நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதற்கு முன்வரவில்லை.
எனவே இனிமேலாவது எங்களது விடயத்தில் கரிசனை எடுத்து எங்களையும் எங்கள் குடும்பத்தையும் வாழவைக்க வழியேற்படுத்தித் தரவேண்டுமென பாதிக்கப்ட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




