(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை கண்டித்து இன்று நிந்தவூர் பிரதேசம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த நான்கு அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நேற்றிரவு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையாளத்தை உறுதி படுத்துமாறு கேட்டுள்ளனர்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய அவர்கள், தங்களை சுற்றிவளைத்த மக்களை தாக்கிவிட்டு தப்பியோடுவதற்கு முயன்றுள்ளனர்.
சம்பவத்தை கேள்வியுற்று அரசியல்வாதிகளும் ஊர் பிரமுகர்களும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில், அவ்விடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட அந்த குழுவினரை மீட்டுக்கொண்டு போவதற்கே முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு பொதுமக்கள் இடம்கொடுக்காமையை அடுத்து. விசேட அதிரடிப்படையினர் வானத்தையும் பூமியையும் நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளாரும் இன்னுமொரு பொது மகனும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் ஏனைய சிலர் நிந்தவுர் மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவத்தினால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியதாகவும், இதற்கு முன்னரும் பலநாட்கள் இப்பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்களும், அச்சுறுத்தல்களும் இடம்பெற்று வந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி சம்பவங்களை கண்டித்து இன்று நிந்தவூரில் கடைகள், அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை போக்குவரத்துப் பாதைகளில் டயர்கள் எரிக்கப்பட்டு, கற்கள் மரக்கட்டைகள் போடப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றாக தடைப்படுத்தப்பட்டிருந்தன.
இதேவேளை,தூர இடங்களுக்குச் செல்லும் அரச, தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் கஷ்ட நிலையைக்கு தள்ளப்பட்டனர். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.