ஆரையம்பதி பகுதியில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

(துசி)

ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தமது காணிகளில் குடியேற சிலர் தடை விதிப்பதாகவும் தமது காணியில் தமது மக்கள் குடியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து மண்முனைப்பற்றில் உள்ள சில முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள தமக்கு சொந்தமான காணிகளை பராமரிப்பதற்கு சிலர் தடைகளை ஏற்படுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பரீட் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கூட்டத்துக்கு வந்தவர்களும் தடுக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராகவும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனுக்கு எதிராகவுகவும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

கடந்த கால பயங்கரவாதத்தினால் தாங்கள் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் தமது பிரதேசத்துக்கு சென்று தமது காணிகளை பராமரிக்க முடியாத நிலையேற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகைதந்த மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்குள் கூட்டத்துக்கு செல்வோர் அனுமதிக்கப்பட்டதுடன் தமக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.