மின்பாவனை சிக்கனத்தினை வலியுறுத்தி விழிப்பூட்டல் ஊர்வலம்

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

மின்பாவனையை சிக்கனமாக பாவிக்குமாறு கேட்டு பாடசாலை மாணவர்களின் விழிப்பூட்டல் ஊர்வலமொன்று நேற்று(19.11.2013) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் நடைபெற்றது.

சக்தி வாரம் எனப்படும் இந்த விழிப்பூட்டல் ஊர்வலம் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.றபீக், பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஹைறுல்லா மற்றும் அப்பாடசாலையின் ஆசிரியர் எம்.எம்.அப்துர் றஹ்மான் உட்பட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மின் சக்தி வலு சேமித்தல், மின்சாரப் பாவனையை குறைத:து அன்னிய செலாவனியை குறைப்போம், மின்சாரத்தை சேமி பொருளாதார நெருக்கடியை குறை, மின் சாரத்தை சேமித்து எதிர் கால வாழ்வை ஒளிபெறச் செய்வோம், என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஊர்வலத்தில் சென்ற பாடசாலை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.

இம் மாணவர்களின் ஊர்வலம் பாடசாலை முன்பாக ஆரம்பமாகி பாலமுனை பிரதான வீதிக்கு சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

கல்வியமைச்சு மற்றும் மின் சக்தி அமைச்சும் இணைந்து மின் சக்தியை சேமிப்பது தொடர்பாக விழிப்பூட்டல் ஊர்வலங்களையும் அறிவூட்டல் வேலைத்திட்டங்களையும் மேற் கொள்ளுமாறு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.